ரோட்டில் இறங்கிய மக்கள்: கிளாம்பாக்கத்தில் கொந்தளிப்பு | Kilambakkam | Kilambakkam Bus
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வட மற்றும் தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் புதனன்று இரவு 9 மணிக்கு மேல் தென்மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று கிலோமீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி ரோட்டின் இருபக்கத்திலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் விடிய விடிய மறியல் தொடர்ந்தது. இரவு 9 மணிக்கு மேல் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்தும், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். இதனால் மணிக்கணக்கில் தூக்கம், பசியோடு குடும்பத்துடன் காத்திருக்க வேண்டி உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். அதே பிறகே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.