ராமலிங்கம் கொலை வழக்கில் வேகம் காட்டும் என்ஐஏ | NIA raid | 10 Places | Dindigul | Ramalingam murder
தஞ்சை திருபுவனம் பாமக நிர்வாகியும், பாத்திர கடை தொழிலதிபருமான ராமலிங்கம் 2019 பிப்ரவரியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் . மத மாற்றத்தில் ஈடுபட்ட சிலரை ராமலிங்கம் கண்டித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொலை தொடர்பாக வழக்கு பதிந்த திருவிடைமருதூர் போலீஸார், சிலரை கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. அதன் பின் என்ஐஏ அதிகாரிகளும் மேலும் பலரை கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் உள்பட 18 பேர் மீது சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரம் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் முகமது அலி ஜின்னா கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் ஜனவரி மாதம் சென்னையில் கைது செய்தனர். இந்த வழக்கை மிக தீவிரமாக விசாரித்து வரும்என்ஐஏ அதிகாரிகள், இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் திடீர் சோதனையில் இறங்கினர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டில் காலை 6 மணி முதல் சோதனை நடந்தது. ஒட்டன்சத்திரம் யூசிப், வத்தலகுண்டு உமர் ஆகியோரின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அத்துமீறி செயல்படும் NIA வெளியேறு என்று SDPI கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.