அதிகாலையிலேயே பல்லடத்தை உலுக்கிய கோர சம்பவம் | palladam ambulance accident | palladam tragedy
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் வயது 60. இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பட்டுக்கோட்டையில் சிகிச்சை பெற்று வந்த முருகனை, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக அவரை ஆம்புலன்சில் கோவைக்கு கொண்டு வந்தனர். அதிகாலை 4 மணி இருக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த மனைவி கல்யாணி, மகள் கவிதா பலத்த காயம் அடைந்தனர். ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்தன. படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் மனைவி கல்யாணி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரித்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கவியரசனுக்கு 19 வயதாகிறது. அவர் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலேயே ஆம்புலன்சை ஓட்டி வந்தது தெரியவந்தது. சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட கணவனும், அழைத்து சென்ற மனைவியும் விபத்தில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.