லாரி மீது மோதிய நீதிபதி கார்: 4 பேர் மரணம்: ஓவர் டேக்கால் விபரீதம் Road accident 4 dies tanjore c
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூர்ண ஜெயந்த் ஆனந்த் திருச்செந்தூர் கோயிலுக்கு நீதிமன்ற ஊழியர்களுடன் சென்றார். சாமி தரிசனம் செய்த பிறகு காரில் இன்று காலை தஞ்சாவூருக்கு புறப்பட்டனர். காரை நீதிமன்ற ஊழியர் வாசுதேவன் ராமநாதன் ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் லாரிக்குள் சொருகி, உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் காரை ஓட்டிய வாசுதேவன் ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமசந்திரன், நீதிபதியின் பாதுகாவலர் நவீன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், நீதிமன்ற ஊழியர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 3 பேரை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ஸ்ரீதர் குமார் இறந்தார். நீதிபதி பூர்ணஜெயந்த் ஆனந்த், உதயசூரியன் ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு நீதிபதி கொண்டு செல்லப்பட்டார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விளாத்திகுளம் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். லாரியை முந்திச்செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாலை விபத்தில் வழக்கறிஞரும், நீதிமன்ற ஊழியர்களும் இறந்த சம்பவம் தஞ்சாவூர் கோர்ட் ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.