ஓசூர் டாடா ஆலையில் தீ: 10 பேர் அட்மிட் | Tata Electronics Hosur fire accident 10 workers injured
கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனபள்ளி கிராமத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இரவுப்பணி முடித்துவிட்டு இன்று அதிகாலை தொழிலாளர்கள் வெளியே கிளம்பினர். அப்போது அங்குள்ள கெமிக்கல் பிளாண்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வானுயர புகை மூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம், ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.