வடமாநில இளைஞர்களை விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு Thoothukkudi youngmen attacks people pallad
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் எதிர்புறத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து பல்லடத்துக்கு பஸ்சில் வந்த 6 இளைஞர்கள், டாஸ்மாக் கடையில் மூக்கு முட்ட மது குடித்தனர். போதை தலைக்கேறியதில் என்ன செய்கிறோம் என்பதை மறந்து அடாவடியில் ஈடுபட்டனர். இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் சுற்றித் திரிந்த அவர்கள், போவோர் வருவோரை தாக்க முயன்றனர். ஆபாசமாக பேசி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அப்போது, ஓட்டலுக்கு சாப்பிட வந்த வட மாநில தொழிலாளர்களை வம்புக்கு இழுத்து தாக்கினர். வட மாநிலத்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடித்தனர். அவர்களை தூத்துக்குடி வாலிபர்கள் விரட்டிச் சென்று, சரமாரியாக தாக்கினர். இரு சக்கர வாகனங்களை நொறுக்கினர். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி தூத்துக்குடி வாலிபர்களே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அவர்களுக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, அட்டூழியத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி இளைஞர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த குணசேகரன், பாலமுருகன், மதன், மாரிச்செல்வம் என தெரிய வந்தது. போலீஸ் வருவதை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். காயப்பட்ட தூத்துக்குடி வாலிபர்களும் அதே ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.