செய்தி சுருக்கம் | 01 PM | 06-10-2024 | Short News Round Up | Dinamalar
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக இறக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து 6 தேர்தல்களில் தோல்வியடைந்த பாஜ இந்த முறை ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. டெல்லியை சாராத ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதே தோல்விக்கு காரணமாக பாஜ பார்க்கிறது. இச்சூழலில், யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் பாஜவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்வர் வேட்பாளர் போட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸஅமிருதி இரானி முன்னிலையில் இருக்கிறார். 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வென்றவர். இந்தாண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கட்சியின் ஆதரவை பெற்றுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி எம்பியும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறார். இவர்களை தவிர லோக்சபா எம்பி கமல்ஜீத் ஷெராவத் உள்ளிட்டேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டி அளிக்க கூடியவராக இருக்க வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. அதனடிப்படையில், விரைவில் டெல்லி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜ முடிவு செய்யும் எனத்தெரிகிறது. இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்பட பலர் பங்கேற்றனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 2 மணி நேரம் சாகச நிகழ்ச்சி நடந்தது. முதலாவதாக ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து மூவர்ண பாராசூட் உடன் குதித்து பறந்து வந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து எம்ஐ17 ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மெரினா கடற்கரையை வட்டமடித்தபடி வலம் வர பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்திய விமான படையின் முக்கிய தாக்குதல் விமானமாக கருதப்படும், ரபேல் விமானங்கள் வலம் வந்தன. இடி முழக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். சுகோய், மிக், மிராஜ் போர் விமானங்களும் விண்ணில் சாகசத்தை நிகழ்த்தின. தொடர்ந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. பாதுகாப்புக்காக 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். சாகச நிகழ்ச்சி பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.