உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 08-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 08-10-2024 | Short News Round Up | Dinamalar

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசு பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2019 குரூப் 1 தேர்வில் சிலர் தமிழ் வழியில் பயின்றதாக சான்றிதழ் வழங்கி, டி.எஸ்.பி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுரையை சேர்ந்த சக்திராவ் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த கோர்ட், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், குரூப் 1 தேர்வில், தமிழ் வழியில் படித்ததாக 22 பேர் சான்றிதழ் சமர்பித்து உள்ளனர். அவர்களில் 4 பேர் மதுரை காமராஜ் பல்கலையில் தொலைநிலை கல்வியில், தமிழ் வழியில் பட்டப்படிப்பை முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. மதுரை வணிக வரித்துறை உதவி கமிஷனர் சொப்னா, ஆத்துார் டிஎஸ்பி சதீஷ்குமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி. மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, அதே பல்கலையின், தொலைநிலை கல்விப்பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்கல் பிரிவு என 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் டிரைவர்கள், கண்டக்டர்கள் பிரிவுகளில் 30 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கத்தை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். எனவே தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பயணியருக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்க, நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்க உள்ளோம். ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும், தலா 1,600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளோம். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யும் போது, தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். தற்காலிக பணியாளர் நியமனம் என்பது நிரந்தர தீர்வு அல்ல. அனைத்து நாட்களிலும் பணி கிடைக்காது என்பதால், தற்காலிக பணிக்கு வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். மேலும், சென்னை போன்ற மாநகரங்களில் பஸ்களை ஓட்ட முடியாமல், அவர்கள் திணறுகின்றனர். தற்காலிக பணியாளர்கள் வாயிலாக அரசு பஸ்களை இயக்கினால் பயணியர் பத்திரமாக ஊர் போய் சேர்வது சிரமம்தான். இந்த பிரச்னைக்கு தீர்வாக, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். பாஜ ஆளும் ஹரியானாவில் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 67.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன்னதாக ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக ஓட்டு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணும் பணிக்கு சென்ற ஊழியர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடந்த முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி