செய்தி சுருக்கம் | 08 AM | 09-10-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் தமிழகத்திற்கு புதிதாக வர உள்ள தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய தொழில்கள் துவங்க, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தங்களுக்கான மாவட்டத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆயுத பூஜை வருகிற 11-ந்தேதியும், விஜயதசமி வருகிற 12-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இன்றும் நாளையும், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இன்று 700, நாளை 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து, பிற இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு, அரசு பஸ்களில் தமிழகம் முழுவதும் பயணிக்க சென்னையில் இருந்து இன்று 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாளை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என 2 நாட்களில் ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 45,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்களில், முன்பதிவு முடிந்த நிலையில் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: மின்விநியோக பெட்டிகள் அனைத்து உரிய முறையில் பராமறிக்கப்படுவதை பொறியாளர்கள் கள ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும். அம்பத்தூரில் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பியை, உடனே உயர்த்த வேண்டும். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அனைத்தும் இயக்கும் நிலையில் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். அனைத்து அதிகாரிகளும் தங்களது மொபைல் போனை எந்த காரணம் கொண்டும் ஆஃப் செய்ய கூடாது. இது மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல் மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி உத்தரவிட்டார்.