செய்தி சுருக்கம் | 08 PM | 15-10-2024 | Short News Round Up | Dinamalar
விடிய விடிய பெய்த மழையால், சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. மழை நீர் தேங்கி இருப்பதால் ரயில்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாகவே வருகின்றன. தண்டவாளங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். எனினும் தொடர்ந்து மழை பெய்வதால் மீண்டும் மீண்டும் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால், மாநகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், அவ்வழியே ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் முக்கிய 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையிலான ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டது. பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதே போல், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.