செய்தி சுருக்கம் | 08 PM | 16-10-2024 | Short News Round Up | Dinamalar
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணபிரான். தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவராக உள்ளார். இவர் மீது 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தச்சநல்லூரில் இருந்து நடுவக்குறிச்சி பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் 2 கார்களில் சென்றார். தாலுகா காவல் நிலைய எல்லையில் தாழையூத்து டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த 2 கார்களையும் மறித்து சோதனை செய்தனர். காரில் ஒரு கைத்துப்பாக்கி, 5 அரிவாள்கள் மற்றும் 4 நாட்டு வெடிகுண்டுகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேரை தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல், பொதுமக்களுக்கு அச்சம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து 15 பேரையும் கைது செய்தனர். யாரையும் தீர்த்துக்கட்டுவதற்காக ஆயுதங்களுடன் காரில் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். பயங்கர ஆயுதங்களுடன் சென்ற 15 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.