செய்தி சுருக்கம் | 08 PM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar
தவெக தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். விஜய் கொள்கைகள் பற்றி ஒரு நிருபர் கேட்டதும், அது பற்றி எனக்கு எப்படி தெரியும்? அவரிடம் கேளுங்கள் என உதயநிதி சொன்னார். மாதம்தோறும் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்து 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 114 எபிசோடுகள் முடிந்து 115வது எபிசோடில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். சுதந்திரத்திற்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி துவங்குகிறது. ஜார்கண்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த ஆண்டு நவம்பர் 15ல் துவங்குகிறது. இந்த இரு தலைவர்களும் நாட்டின் ஒற்றுமை பற்றியே சிந்தித்து, அதற்கு செயல் வடிவம் தந்தனர். இவர்களின் 150வது ஜெயந்தி விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும். சோடா பீம், கிருஷ்ணா, ஹனுமான், மோட்டூ, பத்லுா போன்ற இந்தியாவின் அனிமேஷன்களுக்கு உலகெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அனிமேஷன் துறையின் மேட் இன் இந்தியா மற்றும் மேட் பை இந்தியன்ஸ் திட்டங்கள் உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியர்களின் கற்பனை திறனுக்கு உலக நாடுகளில் வரவேற்பு உள்ளது. கோணார்க், வாரணாசி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை விரிட்சுவல் முறையில் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் காண முடிகிறது. அனிமேஷன், கிரியேட்டிவிட்டி வல்லுனர்களுக்கு உலகெங்கும் பெரிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அக்டோபர் 28ல் உலக அனிமேஷன் நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த தருணத்தில், இந்தியாவை குளோபல் அனிமேஷன் பவர் ஹவுஸ் ஆக மாற்றும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என உறுதி ஏற்போம். சுவாமி விவேகானந்தர் வெற்றிக்கான மந்திரத்தை சொல்லிக் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தியுங்கள், அது குறித்து கனவு காணுங்கள், அதை செயல்படுத்துங்கள், அதை உங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழுங்கள் என்றார். இன்று சுயசார்பு இந்தியா என்ற திட்டமும் அதன் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது. இது சமூக பொறுப்பாக மாறியுள்ளது. ஒவ்வொருவரின் கடமையாக மாறியுள்ளது. சுயசார்பு என்பது நம் கொள்கை மட்டுமின்றி, நம் கனவாகவும் மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆத்மநிர்பர் எனப்படும் சுயசார்பு கொள்கையில் பலருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இப்போது மிகக் கடினமாக தொழில்நுட்பத்தை கூட நாமே கையாளும் திறன் பெற்றுள்ளோம். ஒரு காலத்தில் மொபைல் போன்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, தற்போது மொபைல் போன் உற்பத்தில் உலக அளவில் 2ம் இடத்தில் உள்ளது.