உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 30-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 30-10-2024 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில், மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களின் நிலை குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் மற்றும் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், கடந்த சனிக்கிழமை ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது, மின் வாரியம் தமிழக அரசிடம் இருந்து மானியம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மனோகர் லால் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூட்டத்தில், மின் வாரியத்தின் நிதி நிலைமை பற்றி விரிவாக கேட்டறிந்த மத்திய அமைச்சர் மனோகர் லால், இவ்வளவு கடன் அதிகரிக்க என்ன காரணம் என்றும் வினவினார். இலவசம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் 18,000 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவு தொகையை மாநில அரசிடம் இருந்து மானியமாக பெறுவது ஏன் என்றும் கேட்டார். மானியம் பெறும் தொகையை குறைப்பதுடன், ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பையும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் உள்பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு இது தொடரும். அத்துடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அக்டோபர் 31க்கு பின், வானிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். நவம்பர் 1 முதல் சில மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யலாம்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை