செய்தி சுருக்கம் | 01 PM | 30-10-2024 | Short News Round Up | Dinamalar
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் மீண்டும் ஏற துவங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் சவரன் விலை 50 ஆயிரத்தை தொட்ட நிலையில், மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை மளமளவென சரிந்து, சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி 50,640 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஆகஸ்ட் 8 முதல் ராக்கெட் வேகத்தில் ஏற துவங்கியது. கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதுடன், நேற்று 59 ஆயிரத்தை தொட்டது. இன்றும் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 59,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 7,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 84 நாட்களில் மட்டும் கிராமுக்கு 1,110 ரூபாயும், சவரனுக்கு 8,880 ரூபாயும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே, தங்கம் விலை தாறுமாறாக உயர காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 109 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நந்தி நகர், சிங்காடகுண்டா, கவுரிசங்கர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 25ம் தேதி சந்தை நடந்தது. சிங்காட குண்டா பகுதியை சேர்ந்த 31 வயதான ரேஷ்மா பேகம் என்பவர் தனது இரு மகள்களுடன் சந்தைக்கு வந்துள்ளார். அங்கு தெருவோரம் விற்கப்பட்ட மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். மோமோஸ் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுபோக்கால் ரேஷ்மா அவதிப்பட்டுள்ளார். அவரது மகள்களுக்கும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மூவரையும் கடந்த 27ம் தேதி நிம்ஸ் அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் ரேஷ்மா இறந்துவிடவே, அவரது 2 மகள்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவரது மகன் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அதே கடையில் மோமோஸ் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. இதையடுத்து மோமோஸ் விற்பனையில் ஈடுபட்ட 19 வயதான ராஜிக் மற்றும் 35 வயதான அர்மன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உணவு பொருளில் கலப்படம் செய்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹைதராபாத் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.