இன்றைய மதிய முக்கியச் செய்திகள் |லோக்சபாவில் தொடரும் குழப்பம் | 1 PM | 10-02-2026
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜனவரி 28ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த 1ம் தேதி 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் பேசினர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதை புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார். வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி சபையில் பேசக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு காட்டினார். அன்றைய தினம் முதல் சபை செயல்பட விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்றும் லோக்சபா கூடியதும் ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா முடங்கியது. சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. விரைவில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.