செய்தி சுருக்கம் | 08 AM | 05-08-2025 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேலும், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில், பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில், ஒருசில இடங்களில், இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி வரை மேற்கு மாவட்டங்களில் கனமழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் ஒரு நாள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ====