செய்தி சுருக்கம் | 08 AM | 06-12-2024 | Short News Round Up | Dinamalar
பெஞ்சல் புயல் காரணமாக விழுபு்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இவ்வளவு பெரிய வெள்ளத்துக்கு மழை மட்டும் காரணம் இல்லையாம்; அரசு செய்த மிகப்பெரிய தவறும் பின்னணியில் இருக்கும் தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, சாத்தனூர் அணையில் பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாமல் அதிகளவு நீரை திடீரென திறந்து விட்டதன் விளைவு தான் மிகப்பெரிய வெள்ளத்துக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி அரசு என்ன தவறு செய்தது என்பது பற்றி நீரியல் நிபுணர்கள் கூறியதை பார்க்கலாம். சாத்தனுார் அணையில், நவ., 30ம் தேதி நிலவரப்படி, அதன் முழு கொள்ளளவான 7.32 டி.எம்.சி.,யில், 6.99 டி.எம்.சி., நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், வினாடிக்கு 550 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிச., 1ம் தேதி அணையின் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2,050 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், 1,020 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், 2ம் தேதி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 39,540 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 38,795 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3ம் தேதி அணைக்கு 58,940 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. அந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. நாள்தோறும் 15 முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம் தொடர்பாக நீர்வளத்துறை தயாரிக்கும் அறிக்கையில், இந்த தகவல் உள்ளது. இந்த அறிக்கை, முதல்வர் அலுவலகம், நீர்வளத் துறை அமைச்சர், தலைமை செயலர், வருவாய்த் துறை செயலர் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக, அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அணை திறப்பு குறித்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்கப்பட்டு, டிச., 2ம் தேதி வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், பொருள் சேதங்களையும், உயிர் சேதங்களையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவு நீர் திறக்கப்பட்டது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் நீர்வளத்துறை அறிக்கைக்கும், அமைச்சர் அறிவிப்புக்கும் மலையளவு முரண்பாடு உள்ளது.