செய்தி சுருக்கம் | 08 AM | 10-01-2025 | Short News Round Up | Dinamalar
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை நடந்தது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். ரங்கா ரங்கா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கநானை தரிசனம் செய்தனர்.