செய்தி சுருக்கம் | 08 AM | 11-10-2024 | Short News Round Up | Dinamalar
சமீபத்தில் நடந்த ஜம்மு - காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியானது. 2 மாநிலத்திலும் காங்கிரசுக்கு தான் வெற்றி என்பது போல் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனால் அதை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜ அமோக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் வலுவான எதிர்கட்சியாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். கூட்டத்திற்கு பிரதமர் வந்தபோது, அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹரியானா தேர்தல் வெற்றிக்காக கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில், பிரதமர் மோடி அரை மணி நேரம் பேசி இருக்கிறார். மக்கள் நல திட்டங்கள் நிறைவேறுகிறதா என்பதில் அமைச்சர்கள் குறியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் சக்திதான் மகத்தானது; அந்த சக்தியின் ஆதரவை பெற்றதால்தான், 3வது முறையும் ஆட்சி அதிகாரத்தை நம்மிடம் கொடுக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. நாம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறோம் என்றால், அது மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள். மக்களுக்கு நல்லது செய்தால், நிச்சயம் நமக்கு ஓட்டளிப்பர். மத்திய அரசு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதன் பிரதிபலிப்பு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் நன்றாகவே தெரிகிறது.