இன்றைய காலை முக்கியச் செய்திகள் | பார்லி., சிறப்பு கூட்டம் | சபரிசன் மீட்டிங் | 8 AM | 16-04-2026
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவங்கி 18ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் 106வது அரசியல் சாசன சட்டத் திருத்தம், 2023 ஐ அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா இன்று சிறப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாக உள்ளது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் டில்லி, ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகளில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடந்தது. இதில், காங்., எம்.பி., ராகுல், தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணமுல் மூத்த தலைவர் சஹாரிகா கோஷ், சிவசேனா உத்தவ் பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்., சரத் பவார் அணியின் எம்.பி., சுப்ரியா சுலே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த விதம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தந்திரம் செய்கின்றனர். எனவே, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பார்லி.,யில் போராடும். மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தொடர்ந்து ஆதரித்து வந்தாலும், முந்தைய திருத்தங்களையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தொகுதி மறுவரையறை நடைமுறை குறித்து அரசியல் கட்சிகளிடையே நீண்ட காலமாகவே சில கவலைகள் நிலவி வருகின்றன, என்றார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எழுந்து இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பார்லி., சிறப்பு கூட்டத் தொடரில் விளக்கம் தரப்படும். மசோதாக்கள் விவாதத்திற்கு வரும்போது, இது குறித்த முழுமையான சட்ட நுணுக்கங்களும், மாற்றங்களும் எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்படும். அப்போது மசோதா குறித்து எழுந்த சந்தேகங்களும், தவறான அபிப்பிராயங்களும் மறைந்துவிடும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.