உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 21-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 21-01-2025 | Short News Round Up | Dinamalar

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இப்போது 78 வயதாகிறது. அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார். இந்நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க பார்லிமென்ட் செயல்படும் கேபிட்டால் கட்டடத்தில் நேற்று பதவி ஏற்பு விழா நடந்தது. அமெரிக்காவில் இப்போது கடுங்குளிர் நிலவுவதால், 40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பதவியேற்பு விழா பார்லிமென்ட் உள்ளே நடந்தது. வட்ட வடிவிலான மூடிய அரங்கில் அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அவருக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக டிரம்ப் கட்சியைச் சேர்ந்த ஜே.டி. வான்ஸ் துணை அதிபராக பதவியேற்றார். இந்த விழாவில் அதிபராக இருந்த ஜோ பைடன், துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ், உலக பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தையும் டிரம்பிடம் ஜெய்சங்கர் வழங்கினார். அதிரடியான அறிவிப்புகளுக்கு பெயர் பெற்ற டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்று இருப்பது உலகத்தையே உற்று பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு உள்ளேயும், உலக அரசியலிலும் அவரது செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்று உலக தலைவர்கள் கவனித்து வருகின்றனர். டிரம்புக்கு மோடியுடன் நல்ல நட்பு இருக்கிறது. ஏற்கனவே அவர் அதிபராக இருந்த போது, 2020 பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார். ஆமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மோடியுடன் பங்கேற்றார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு கொடுத்த ஆதரவை இப்போது வரை அவர் பெருமையாக பேசுவது உண்டு. இதற்கிடையே அதிபராக பதவி ஏற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து மோடி அறிக்கை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும் வகையிலும், உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கவும் டிரம்புடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று அதில் மோடி கூறி உள்ளார்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை