செய்தி சுருக்கம் | 08 PM | 05-02-2025 | Short News Round Up | Dinamalar
டில்லி, ஈரோடு தேர்தல் நிறைவு வெளியானது 5 மணி நிலவரம் டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வரும் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ என மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. காலையில் குளிர் காரணமாக ஓட்டுப்பதிவு மந்தமாக நடந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உட்பட பலர் ஓட்டளித்தனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் களம் கண்டனர். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மாலை 6 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவானது. டெல்லி மற்றும் ஈரோடு கிழக்கு தேர்தல் ஓட்டுகள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகிறது.