செய்தி சுருக்கம் | 08 PM | 08-04-2025 | Short News Round Up | Dinamalar
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாம் அரசு முறை பயணமாக டில்லி வந்தடைந்தார். டில்லி ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். கேரளா ஸ்பெஷல் செண்டை மேளம், சிவப்பு கம்பள மரியாதையுடன் துபாய் இளவரர் ரஷீத் அல் மக்துாம்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் துபாய் இளவரசரை சந்தித்து பேசினர். தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. பின் பிரதமர் நரேந்திர மோடி - இளவரசர் ரஷீத் அல் மக்துாம் இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமர் மோடியுடனான சந்திப்பு தன்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக இளவரசர் மக்துாம் பதிவிட்டுள்ளார். இந்திய வருகை மற்றும் மோடியுடனான சந்திப்பு இந்தியா - யுஏஇ நாடுகள் இடையிலான நட்பு, நன்னம்பிக்கை அடிப்படையில் தொன்று தொட்டு வரும் வரலாற்றை மீண்டும் உறுதிப்படுத்தியது எனவும் ஷேக் ரஷீத் கூறியுள்ளார். டில்லியில் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புக்கு பின், மும்பை செல்லும் இளவரசர், தொழில் அதிபர்களை சந்தித்து பேச உள்ளார். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், தொழில் முதலீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். துபாய் இளவரசரின் இந்திய வருகை, பல புதிய ஒப்பந்தங்களுக்கு வழி வகுக்கும் என, மத்திய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.