செய்தி சுருக்கம் | 08 PM | 09-05-2025 | Short News Round Up | Dinamalar
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. குருத்வாரா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பொய் சொல்கிறது. மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. இதில் 2 குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் இந்தியாவிடம் ஒருபோதும் பலிக்காது. ஒட்டுமொத்த இந்தியாவும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவுக்கு ஆதரவு தருவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. பாகிஸ்தான் முயற்சி ஒருபோதும் பலிக்காது. பொய் மூலம் உலக நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானுக்கு செல்லும் நிதியுதவிகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சர்வேதச நாணய நிதியத்திடம் பேசப்படும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். கர்னல் சோபியா குரேஷி கூறியதாவது: இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. 300 முதல் 400 ட்ரோன்களை பயன்படுத்தி 36 இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. அவற்றை இந்தியா வழிமறித்து அழித்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. அவற்றின் மூலம் பல தகவல்களை சேகரித்து வருகிறோம். இந்தியாவின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. உளவு தகவல்களை சேகரிக்கவே மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் ஊடுருவியுள்ளது என சோபியா குரேஷி கூறினார். பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தி வருவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார். வான் எல்லையை மூடாமல் மக்களின் உயிரை பாகிஸ்தான் பணயம் வைத்திருக்கிறது என்றும் கூறினார்.