செய்தி சுருக்கம் | 08 PM | 13-10-2024 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையே வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16ம் தேதியில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, 15 மற்றும் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சூழல் உள்ளது. அரபிக்கடல், வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை தொடரும் என பாலச்சந்திரன் கூறினார்.