இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை | 8 PM | 23-10-2025
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை ஆசியான் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டை மலேசியா தலைமை ஏற்று நடத்துகிறது. உறுப்பு நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா உள்ளிட்டவை இதில் பங்கேற்க உள்ளன. இதில் பங்கேற்க வரும் படி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் பங்கேற்கும் அனைத்து கூட்டங்கள், மாநாடுகள், செய்தியாளர் சந்திப்புகளிலும் இந்தியா - பாக்., போரை தானே நிறுத்தியதாக திரும்ப திரும்ப கூறி வருகிறார். இந்தியா - பாக்., விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது கூட, பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றே, தாக்குதலை நிறுத்தினோம் என, பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இதே கருத்தை நம் வெளியுறவு அமைச்சகமும் பல முறை தெரிவித்து, விளக்கம் அளித்துவிட்டது. எனினும், அமைதிக்கான நோபல் பரிசு கனவுடன் சுற்றித் திரிந்த டிரம்ப், தொடர்ந்து தான் கூறியதையே கூறி வந்தார். இந்தாண்டு அவரது நோபல் பரிசு கனவு தகர்ந்து போன போதிலும், இந்தியா - பாக்., சண்டையை தான் தான் நிறுத்தியதாக தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட ரஷ்யாவிடம் இந்தியா இனி எண்ணெய் வாங்காது என, பிரதமர் மோடி தன்னிடம் போனில் உறுதி அளித்ததாக கூறினார். டிரம்ப்பின் பேச்சுக்கு உடனே மறுப்பு தெரிவித்த இந்திய அரசு, டிரம்ப்பிடம் மோடி போனில் பேசவில்லை என உண்மையை போட்டு உடைத்தது. சமீபத்தில் இஸ்ரேல் - காசா சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, எகிப்தில் நடந்த காசா அமைதி ஒப்பந்தம் குறித்த கூட்டத்தில் பங்கேற்க வரும்படி உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு சென்றால், அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், டிரம்ப் மீண்டும் அதே பொய்யை திரும்ப சொல்லும் போது, மோடி அங்கு மறுத்து பேசினாலும், மறுக்காமல் மவுனம் காத்தாலும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, தொடர்ந்து பொய் பேசி வரும் டிரம்ப்பை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், எகிப்து கூட்டத்தில் மோடி பங்கேற்காமல், இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கீர்த்திவர்த்தன் சிங்கை அனுப்பி வைத்தார். இந்நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன், பிரதமர் மோடி இன்று போனில் பேசினார். மாநாட்டை தலைமையேற்று நடத்தும் மலேசியாவுக்கும், மாநாடு வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். தான் இதில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்பதாக உறுதி அளித்தார். இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்க உள்ளார். இதன் மூலம், இந்தியா - பாக்., போர் நிறுத்தம் பற்றி தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வரும் டிரம்ப்பை நேரில் சந்திப்பதை மோடி மீண்டும் தவிர்த்துள்ளார். 2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து, 2022ம் ஆண்டு தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் நடந்த ஆசியான் மாநாடுகளில் பங்கேற்றார். இதன் மூலம், அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2022க்கு பின் தற்போது தான், மோடி ஆசியான் மாநாட்டில் நேரடியாக பங்கேற்காமல் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. Modi| Trump| AseanSummit| Malaysia|