இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் | 8 PM | 29-08-2025
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குழுமிய இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை பார்த்து உற்சாகம் அடைந்ததுடன், அவரை குதுாகலத்துடன் வரவேற்றனர். ஆடல், பாடல் மற்றும் மந்திரம் ஓதி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளை மோடி பார்த்து ரசித்தார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சிகேரு இஷிபாவை மோடி சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவுகள், தொழில், முதலீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்கு குழுமியிருக்கும் தொழில் அதிபர்கள் பலர் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்கள். நான் குஜராத் முதல்வராக இருந்த போது, பலரை சந்தித்துள்ளேன். மெட்ரோ, செமி கன்டக்டர் என பல துறைகளில் இந்தியா - ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. ஜப்பானின் பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை பெருக்கி வருகின்றன. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வது, வெறும் லாபத்தை மட்டும் தருவதல்ல; அது முதலீட்டை பல மடங்காக பெருக்கித் தரும். இந்தியாவில் பண வீக்கம் குறைவாக உள்ளது. வங்கிக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், முதலீடு செய்வதற்கும் தொழில் புரியவும் இந்தியா ஏற்ற நாடாக உள்ளது. 2017ல் ஒரு நாடு ஒரே வரி என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன் மூலம், பல நன்மைகளை அடைந்துள்ளோம். தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேலும் புதிய சீர்திருத்தத்தை அமல்படுத்த உள்ளோம். வருமான வரிச் சட்டத்திலும் சீர் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங் 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது உயர்ந்துள்ளது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. மிக விரைவில், உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக நாங்கள் உருவெடுப்போம். உலகின் தேவையை பூர்த்தி செய்ய இந்திய தயாரிப்புகள் பயன்படும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். இந்தியா - ஜப்பான் கூட்டு உடன்படிக்கையின் மூலம் கிரீன் எனர்ஜி துறையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில், கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் 160க்கும் மேற்பட்ட ஏர்போர்ட்கள் உள்ளன. 1000 கிமீக்கு மேல் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் உதவியுடன் மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணி நடந்து வருகிறது. ஆனால், இந்தியா - ஜப்பான் இடையிலான உறவு இத்துடன் முடிவதல்ல. திறன் வாய்ந்த இந்திய இளைஞர்கள், உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இவர்களை ஜப்பானும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியா - ஜப்பான் உறவு மிகப் பொருத்தமானது. இரு நாடுகளும் சேர்ந்து குளோபல் சவுத் வளர்ச்சிக்கும், ஆசிய நாடுகளின் வளமான எதிர்காலத்துக்கும் வழி வகுக்க வேண்டும் என, பிரதமர் மோடி பேசினார்.