செய்தி சுருக்கம் | 08 PM | 23-07-2025 | Short News Round Up | Dinamalar
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். டில்லியில் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேசவுள்ளார். பிரிட்டன் பிரதமராக ஸ்டார்மர் பொறுப்பேற்ற பின் மோடியின் முதல் பிரிட்டன் பயணம் இது என்பதால், அவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களும் இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு, வர்த்தம், முதலீடு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலாேசிப்பர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருட்களின் ஏற்றுமதி மற்றும் பிரிட்டிஷ் பொருட்களின் இறக்குமதிக்கான வரி விதிப்பு முறையில் மிகப் பெரிய மாற்றம் வரும். இந்திய தயாரிப்புகளை பிரிட்டனில் சந்தைப்படுத்துவதும், பிரிட்டன் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவதும் எளிமையாகும். இதன் மூலம் இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 2030ல் இரட்டிப்பாக்க இந்தியா - பிரிட்டன் நாடுகள் திட்டமிட்டுள்ளன. தொழில், முதலீடு, ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. பிரிட்டன் சென்றுள்ள மோடி மரியாதை நிமித்தமாக அந்நாட்டு மன்னர் சார்லசை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23, 24ம் தேதிகளில் பிரிட்டனில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி, அங்கிருந்து மாலத்தீவுகளுக்கு செல்கிறார். அந்நாட்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மோடி, அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார். இரு நாட்டு உறவு, பாதுகாப்பு குறித்து இருவரும் பேச்சு நடத்த உள்ளனர்