செய்தி சுருக்கம் | 01 PM | 11-10-2024 | Short News Round Up | Dinamalar
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என தனி கோயில் இது என்பது தனி சிறப்பு. ஒட்டக்கூத்தர் எனும் தமிழ் புலவர் இங்கு வாழ்ந்து இந்த கோயிலில் வழிபட்டதால் இந்த ஊருக்கு கூத்தனூர் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சரஸ்வதி பூஜை, விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அக்டோபர் 3ல் தொடங்கியது. இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி அம்மன் பாத தரிசன விழா தொடங்கியது. கோயிலுக்கு வரும் மாணவ மாணவிகள் நோட்டு புத்தகங்களை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர். திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலை முதல் திரண்டு தரிசனம் செய்கின்றனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.