தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
வெங்காயம் ஏற்றுமதி வரி குறைப்பு நம் நாட்டின் விவசாயிகள் நலன் கருதி, வெங்காயம் ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கான வரி 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசிக்கான ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யும் விவசாயிகள் நலன் கருதி, அந்த விளை பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி 3.0 ஆட்சி 100 நாள் சாதனை மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாட்களில் நாட்டின் சாலை போக்குவரத்து, ரயில்வே, துறைமுகங்கள், விமான போக்குவரத்தை மேம்பாட்டில் மத்திய அரசு அதீத கவனம் செலுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூரத் நகரில் கொடி அணிவகுப்பு முஸ்லிம்கள் பண்டிகையான மிலாது நபியை முன்னிட்டு குஜராத்தின் சூரத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கையில் துப்பாக்கி, தடி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மின்னொளியில் ஜொலிக்கும் பள்ளிவாசல் மிலாது நபி பண்டிகையை ஒட்டி கோவை மாநகர் முழுதும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டைமேடு பெரிய பள்ளிவாசல் மற்றும் சின்ன பள்ளிவாசல் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.