தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 OCT 2024 | 09 PM | Dinamalar Express | Dinamalar
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். உயிர்சேதம் இல்லாதது பெரும் நிம்மதியாக இருந்தாலும் ஒவ்வொரு ரயில் பயணத்தையும் இனி நிம்மதி இல்லாத பதட்டத்தை உருவாக்கியுள்ளது என்றார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி விழா கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் கவுரவமும், புகழும் உலகளவில் அதிகரித்துள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, உலகில் பாரதம் வலிமையாகவும், மதிக்கப்படுவதாகவும் அனைவரும் உணர்கிறார்கள். நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேறி வருகிறது என்றும் கூறினார். அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள். புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுகிறது என்றும் கூறினார்.