ரஜினியிடம் சீமான் பேசியது என்ன? Seeman | NTK | Rajini | 2026 Election
ரஜினியிடம் சீமான் பேசியது என்ன? Seeman | NTK | Rajini | 2026 Election நடிகர் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியுள்ளார். எடுத்ததுமே, தனக்கு எதிராக தன் கட்சியினரையே கொம்பு சீவி விடும் வேலையில் தி.மு.க. களம் இறங்கி இருப்பது குறித்த தன் ஆதங்கத்தை, ரஜினியிடம் கொட்டி உள்ளார் சீமான். எனக்கு எதிராக கொம்பு சீவி விடப்படும் என் கட்சியினரையும் கூட நேரடியாக கட்சியில் சேர்த்துக் கொள்ளாமல், அவர்களுக்கு தேவையானதை கொடுத்து, என் பெயரை கெடுக்கச் சொல்கின்றனர். அதற்கேற்ப, நாம் தமிழரில் நேற்று வரை தம்பிகளாக இருந்தவர்களெல்லாம், போட்டி நாம் தமிழர் இயக்கம் துவங்கப் போவதாகச் சொல்லி, என்னை வசைபாடுகின்றனர் என ரஜினியிடம், சீமான் வருத்தப்பட்டு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் பற்றியும், அவரது கட்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது கொள்கையை தான் எதிர்த்தேன்; விஜயை எதிர்க்கவில்லை. அவரை சொந்த தம்பி போல பாவித்தேன். அவர் என்னை அண்ணன் என, உதட்டளவில் அழைத்து விட்டு, கட்சி துவக்கிய பின் என்னை எதிரியாக பார்க்கிறார். எங்கள் நிர்வாகிகளையெல்லாம் தன் கட்சியான த.வெ.க.வுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளார். என்னோடு அரசியலில் இணக்கமாக இருந்து செயல்பட்டால், எனக்கு எதிரான ஓட்டுகள் தனக்கு வராது என்று நினைத்தே, என் கட்சியினரை தன் பக்கம் வளைக்க முயல்கிறார். அதை அறிந்த பின்தான், நடிகர் விஜயையும், அவருடைய கட்சிக் கொள்கையையும் விமர்சித்து பேச வேண்டியதாகி விட்டது. அவரோடு அரசியல் ரீதியிலான முரண்பாடு தானே தவிர, தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அதோடு, ஆளுங்கட்சியை வீழ்த்தும் விஷயத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என்பதில், அவருக்கு உடன்பாடான கருத்து இல்லை என கேள்விப்படுகிறேன். அதனால், அவரோடு இணைந்து பயணிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. தனித்து போட்டியிட்டு, நாம் தமிழரின் சொந்த அடையாளத்தை நிலை நிறுத்தத்தான் விரும்பினேன். ஆனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.வை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும்; வீழ்த்தினால் மட்டுமே, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்வோருக்கு எதிர்காலம் இருக்கும். இது தான் எதார்த்தம்; அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதனால், தனித்து மட்டுமே களம் காணுவது என்ற தீவிரமான முடிவை சற்று தளர்த்தி, வரும் தேர்தலில், என் தலைமையில் கூட்டணி ஏற்படுத்தலாமா என யோசிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய, பா.ஜ. தலைவர்கள் சிலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒருவேளை அந்த முயற்சி சாதகமான முடிவை எட்டுமானால், அதற்கு முன் என்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ. தரப்பில் அறிவிக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் வேண்டும் என ரஜினியிடம் சீமான் கூறியிருக்கிறார். அதற்கு எந்த உத்தரவாதமும் தராமல் பதில் அளித்துள்ளார் ரஜினி. அதாவது, தற்போது அரசியல் ரீதியாக, நான் எந்த முடிவும் சொல்ல முடியாது; சொல்ல வேண்டிய நேரத்தில் முடிவை சொல்வேன் என கூறியுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறின.