செய்தி சுருக்கம் | 08 PM | 29-01-2025 | Short News Round Up | Dinamalar
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் துவங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது செவ்வாய்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். இன்று தை அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்ததாக டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார். இதில் 25 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் 5 பேரின் அடையாளம் காணும் பணி தொடர்வதாகவும் கூறினார். காயமடைந்த 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.