செய்தி சுருக்கம் | 08 AM | 28-11-2024 | Short News Round Up | Dinamalar
ஜனாதிபதி திரவுபதி முர்மு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று ஊட்டி வந்தார். மோசமான வானிலை காரணமாக டில்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, கோவையில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியே மதியம் ஊட்டி ராஜ் பவன் வந்தடைந்தார். கவர்னர் ரவி, அமைச்சர் மெய்யநாதன், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி. நிஷா ஆகியோர், அவரை வரவேற்றனர். குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி முர்மு பங்கேற்க உள்ளார். நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் நாளை சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு 30-ந்தேதி திருவாரூருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை யாத்திரிகர் நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஸ்ரீரங்கம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.