செய்தி சுருக்கம் | 01 PM | 13-02-2025 | Short News Round Up | Dinamalar
வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைய உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்.பி ஜெகாதாம்பிகா பால் தலைமையிலான பார்லிமெண்ட் கூட்டுக்குழு 30க்கும் மேற்பட கூட்டங்கள் நடத்தி மசோதா தொடர்பாக ஆய்வு செய்தது. இதில் பாஜ கூட்டணி எம்.பிக்கள் கொண்டுவந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால், கடந்த 30-ம் தேதி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்தார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான பார்லி கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ராஜ்யசபாவில் பாஜ எம்.பி மேதா விஷ்ரம் குல்கர்னி அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.