செய்தி சுருக்கம் | 08 AM | 1210-2024 | Short News Round Up | Dinamalar
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடந்த பயங்கர ரயில் விபத்து தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்ல வேண்டிய பாக்மதி ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானது. கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஏற்கனவே நின்ற சரக்கு ரயிலின் பின்னால் மோதி தடம்புரண்டது. ரயில் தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் பிழைக்க அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிலர் காயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார், ரயில்வே ஊழியர்கள் இதர மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய தகவல் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைசூருவில் புறப்பட்ட ரயில் அடுத்தடுத்த ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று திருவள்ளூர் மாவட்டத்துக்குள் நுழைந்தது. பொன்னேரி ரயில்வே ஸ்டேஷனை இரவு 8:27 மணிக்கு கடந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த ரயில் கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடந்தாக வேண்டும். அதன்படி, கவரப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கியது. அங்கு அந்த ரயில் நிற்க வேண்டியதில்லை. மெயின் தண்டவாளம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்ல க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது.