செய்தி சுருக்கம் | 08 AM | 31-05-2025 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாடு முழுதும் பல இடங்களில் கொரோனா தொற்று பரவி வருவதால், நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவது அவசியம். தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நோய் பரவல் தீவிரமாக உள்ள பகுதியில், கூடுதல் கண்காணிப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்வது அவசியம். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தால், அதை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பொதுமக்களிடம் நோய் பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையானவர்கள் இன்ப்ளூயன்ஸா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். நோய் தொற்று, காய்ச்சல், அறிகுறி உள்ளவர்கள், வீட்டில் ஓய்வில் இருத்தல் அவசியம் என கூறப்பட்டு உள்ளது.