செய்தி சுருக்கம் | 08 AM | 06-10-2024 | Short News Round Up | Dinamalar
தமிழகம் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ம் தேதிவரை பெரும்பாலான இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை மாநிலத்தின் திட்டமாக இருந்தது. அதற்கான நிதியில் 90 சதவீதத்தை தமிழக அரசு ஏற்பதாக இருந்தது. எஞ்சிய 10 சதவீத திட்ட செலவை மத்திய அரசு செய்வதாக இருந்தது. தமிழக அரசு சார்பில் 22,228 கோடி, மத்திய அரசு சார்பில் 7425 கோடி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் 33,593 கோடியும் கடனும் பெறப்படும் மாநில அரசு தெரிவித்து இருந்தது. தற்போது இத்திட்டம் மத்திய அரசு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான 65 சதவீத நிதியை மத்திய அரசே வழங்க உள்ளது. மத்திய அரசின் பங்கான 7425 கோடியுடன், பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்படும் 33,593 கோடி கடனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதனால் மாநில அரசின் நிதிச்சுமை குறைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்தும் முகமையாக, மாநில அரசு இதுவரை இருந்தது. இனி, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்காக மட்டும் பிரத்தியேக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் நின்றபடியேதான் சாகச் நிகழ்ச்சியை கண்டுகளிக்க முடியும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 2 மணி நேரம் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்த, காமராஜர் சாலையையொட்டி 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாகச நிகழ்ச்சி பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.