செய்தி சுருக்கம் | 08 PM | 19-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai LIC இணையதளத்தில் ஹிந்தி தலைவர்கள் கண்டனம் இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தது. இன்று காலை முதல் முழுக்க ஹிந்தி மொழிக்கு மாறியது. மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் ஹிந்தியிலேயே இருந்ததால் மற்ற மொழி பேசும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எல்ஐசி இணையதளம் ஹிந்தி திணிப்பதற்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது வலுக்கட்டாயமாக ஒற்றை மொழியை திணிக்கும் செயல் இது. எந்த தைரியத்தில் எல்ஐசி இப்படி பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்ஐசியின் இணையதளம், முழுக்க, முழுக்க ஹிந்தி மயமாக்கப்பட்டு உள்ளதை வன்மையாக கண்டிப்பதாக துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ஹிந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல் என கூறியுள்ளார். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.