செய்தி சுருக்கம் | 08 AM | 22-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai கயானா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றினார். முதலில் ஜனநாயகம், முதலில் மனிதநேயம் என்ற எண்ணம் தான் உலகத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த வழி. முதலில் ஜனநாயகம் என்பது அனைவரின் வளர்ச்சியுடன் முன்னேற கற்றுத்தருகிறது. மனிதநேயம் முதலில் என்ற எண்ணம் நமது முடிவுகளின் திசையை தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மனித குலத்தின் நலனுக்காக இருக்கும். ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல அதுதான் நமது டிஎன்ஏ, நோக்கம், நடத்தை என்பதை இரு நாடுகளும் ஒன்றாக காட்டி உள்ளன. நாங்கள் ஒருபோதும் விரிவாக்க உணர்வோடு முன்னேறவில்லை. வளங்களை கைப்பற்றுவது, பிடுங்குவது போன்ற மனப்பான்மையிலிருந்து எப்போதும் விலகியே இருக்கிறோம்.உலகளவிய தெற்கு பகுதியின் குரலாக இந்திய மாறி இருக்கிறது. உலகின் தெற்கு பகுதி கடந்த காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வளர்ச்சியை அடையவே நாம் முயற்சிக்கிறோம். இருந்தாலும், பல நாடுகள் சுற்றுச்சூழலை அழித்து முன்னேறி உள்ளன. இன்று உலகின் தெற்கு பகுதி காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய விலையை கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்தியாவாக இருந்தாலும், கயானாவாக இருந்தாலும், வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விருப்பங்கள் உள்ளன. அதற்கு உலகளாவிய தெற்குபகுதி ஒன்றுபட்டு நிற்பது முக்கியம். இது மோதல்ளுக்கான நேரம் அல்ல, மோதல் சூழ்நிலைகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நேரம். பயங்கரவாதம், போதை, சைபர் கிரைம் என எத்தனையோ சவால்கள் உள்ளன. அவற்றை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது சந்ததியினரின் வருங்காலத்தை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார். சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக - எம்.பிக்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது. இதில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வரும் 25ல் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. அதில் ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. எந்தெந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து இன்று நடக்கும் எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி பேச அறிவுறுத்தப்படுவதோடு, சில விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என திமுக வட்டாரங்கள் கூறின.