செய்தி சுருக்கம் | 08 PM | 16-12-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 PM | 16-12-2024 | Short News Round Up | Dinamalar #செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறன்று இந்தியா வந்தார். அதிபரான பிறகு திசநாயகே இந்தியா வருவது இதுதான்முதல்முறை. இன்று காலை அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே சந்தித்தார். 2 வருடங்களுக்கு முன் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா செய்த உதவிகளுக்காக பிரதமர் மோடிக்கு அதிபர் திசநாயகே நன்றி தெரிவித்தார். கடனுதவி மற்றும் நிதியுதவியாக இலங்கைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா வழங்கியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். தமிழ் மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இலங்கையில் வாழும் தமிழர்களின் விருப்பங்களை இலங்கை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என மோடி வலியுறுத்தினார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மீனவர் பிரச்னையை அணுக வேண்டும். எனவும் மோடி சொன்னார். அதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். மோடி கூறியதாவது: அனுர குமார திசநாயகேவின் முதல் இந்திய பயணத்தால் இந்தியா, இலங்கை இடையே உறவு மேலும் வலுப்படும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இலங்கையின் பால் வளம், மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும் என மோடி கூறினார்.