ஜோஃப்ராவை டாக்ஸியுடன் ஒப்பிட்டதால் சர்ச்சை Harbhajan Singh |Jofra Archer| IPL 2025|
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங். ஐபிஎல் 2025 போட்டிகளின் வர்ணனையாளராக இருக்கிறார். நேற்று ஐதராபாத்- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்றது. ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் Jofra Archer விளையாடினார். ரூ.12.5 கோடிக்கு அவரை ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்திருந்தது. ஆனால், நேற்றைய முதல் போட்டியில் அவர் மிக மோசமான பவுலிங் செய்தார். 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்தார். 18வது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசியபோது, பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அவருடைய பந்துகளை அனாயசமாக அடித்து ரன்களை குவித்தனர். தொடர்ச்சியாக சில பவுண்டரிகளையும் அடித்தனர். இதை வர்ணனை செய்த ஹர்பஜன்சிங், லண்டன் நகரில் ஓடும் கருப்பு நிற டாக்சிகளின் மீட்டரைப் போல, ஆர்ச்சரின் ரன் கொடுக்கும் மீட்டரும் அதிகமாக உள்ளது என பேசினார். ஹர்பஜனின் இந்த கமென்ட் ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிறத்தை குறித்து பேசியதாக சர்ச்சையை கிளப்பியது. ஹர்பஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஐபிஎல் வர்ணனை குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் வலியுறுத்தினர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, ஹர்பஜன் சிங்கோ இது குறித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. ஹர்பஜன் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள், அவரிடம் இனவெறியுடன் மோசமாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. அப்போது கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்பஜனுக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது ஹர்பஜனுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.