இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த 2 தமிழர்கள் Test series against England |Indian te
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை தலைமை ஏற்று வழி நடத்தும் பொறுப்பு இளம் வீரர் ஷூப்மன் கில்-இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று நடந்த பிசிசிஐ தேர்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிய கேப்டன் அறிவிப்பை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார். ஷூப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, ஜூன் 20ல் ஹெட்டிங்லி நகரில் நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த பொறுப்பு ஜஸ்பிரீத் பும்ராவிடம் இருந்தது. இவர்கள் இருவர் தவிர, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகிய 16 பேரும் இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பனாக இருந்த ரோஹித் சர்மா இம்மாதம் 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்தார். இதனால் புதிய கேப்டன், துணை கேப்டன் மற்றும் புதிய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஷூப்மன் கில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் அவரது பங்களிப்பு பாராட்டபட்டு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு கூறியுள்ளது.