பேட்மிண்டன் போட்டியில் முத்திரை பதித்த கல்லூரி அணிகள்! Women's Badminton |College Badminton Tourname
பேட்மிண்டன் போட்டியில் முத்திரை பதித்த கல்லூரி அணிகள்! Womens Badminton |College Badminton Tournament பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பேட்மிண்டன் போட்டி, கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணியும், பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 2-1 என்ற நேர் செட் கணக்கில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடுமலைப்பேட்டை அணியும், கோபி கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் கோபி கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அரசு கலைக் கல்லூரி அவிநாசி அணிக்கும், ஜி.ஆர்.டி. கலை அறிவியல் கல்லூரி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஜி.ஆர்.டி. கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதேபோல், குமரகுரு கலை அறிவியல் கல்லூரி அணியும், நிர்மலா மகளிர் கல்லூரி அணியும் மோதிய போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் குமரகுரு கல்லூரி அணி வெற்றி பெற்றது. தொடக்க விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரும் செயலருமான சிவகுமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வித் துறை செய்திருந்தது. போட்டிகள் நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.