உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்: பலிபீடத்தில் காமத்தை கருவறுக்கச் சொல்லும் சிற்பம்!

சேலம், வாழப்பாடியில் இருந்து 6 கி.மீ., தொலை வில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில். 1,000 ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தின் பலிபீட மேல்விதானத்தில் இந்த ஐம்மலங்களின் உருவக சிற்பம் . இந்த பலிபீடத்தை 'பத்திரலிங்கம்' என்றும், 'பாசத்தின் அறிகுறி' என்றும் சொல்கிறது திருமூலரின் திருமந்திரம்! ஆணவம், 'செயல்' எனும் கன்மம், 'பொய்' எனும் மாயை, 'சுத்தமான மாயை' எனும் மாமாயை, 'மறைத்தல்' எனும் திரோதாயி என்ற ஐம்மலங்களின் உருவகமாக, 'மாயை'யை பெண்ணாகவும், சுற்றி நிற்கும் மற்றவற்றை ஆண்களாகவும் இச்சிற்பம் காட்டுகிறது! 'மாயை' எனும் மங்கையின் வனப்பு மிகுந்த உடல் செழிப்பும், அவளது வலக்கரத்தின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் - ரதியின் வாகனமான கிளியின் அழகும் சிற்பியின் கைவண்ணம் சொல்ல, 'இச்சிற்பம் நாயக்கர் ஆட்சி காலத்தின் கோவில் புனரமைப்பில் வடிக்கப்பட்டது' எனும் வரலாறு சொல்கிறார் பச்சைக்கந்த சுவாமிகள் மடத்தின் புலவர் வீ.வீரமணி. 'ஐந்து மலங்களுக்கும் வெட்கம் இல்லை' என்பதைச் சொல்ல, அவை ஆபரணங்கள் மட்டுமே தரித்து உடையற்று நிர்வாணமாய் இருக்கின்றன. இதோ... தளர்ந்து வளைந்த நிலையில் இருக்கும் இந்த ஆண்குறிகள் காம இச்சையை பலியிடச் சொல்கின்றன' என்கிறார் கோவில் அர்ச்சகர் சிவராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !