உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தன்னுயிர் தரும் காவல் நாயகனின் கதை

தன்னுயிர் தரும் காவல் நாயகனின் கதை

ஊ ட்டியில், ஜெர்மன் ஷெப்பர்டு இன பப்பிகளுக்காக, 'ஆல்பா ஹவுஸ்' (Alpha huse) என்ற பெயரில், பிரத்யேக கென்னல் நடத்தி வருபவர் ஹர்ஷா. இவர், நம்மிடம் பகிர்ந்தவை: செம்மறி ஆடுகளை மேய்ப்பது, தோட்டத்தில் அவைகளுக்கு காவலாக இருப்பது போன்ற பணிகளுக்காக துவக்கத்தில், பயன்படுத்தப்பட்ட பப்பி தான் இந்த ஜெர்மன் ஷெப்பர்டு. அதீத புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு, ஆற்றல், கட்டளையை உடனே நிறைவேற்றும் பாங்கு என பல தனிச்சிறப்புகள் இதனிடம் இருந்ததால், முதல், இரண்டாம் உலகப்போர் சமயங்களில், மீட்பு, தேடுதல் பணி, முக்கிய தகவல்களை படைவீரர்களுக்கு கொண்டு சேர்க்கும் துாதுப்பணிகளுக்கு, இந்த இன பப்பிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. தற்போதும் இந்தியா உட்பட பல நாடுகளில், காவல், ராணுவத்திற்கு இவற்றையே, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இது கிட்டத்தட்ட 60-65 செ.மீ. உயரமும், 30-40 கிலோ எடையும் கொண்டதால், அதிக உயரத்தில் குதித்து, எதிரிகளை வீழ்த்திவிடும். இதன் கண்காணிப்பு வளையத்தில் இருந்து யாரும் தப்ப முடியாத அளவுக்கு கவனமாக செயல்படும்.எதையும் எளிதில் கற்று கொள்ளும் என்பதால், இப்பப்பியை வாங்குவோர் கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும். அதீத ஆற்றல் கொண்டதால், இதை சிறிய இடத்தில் வளர்க்க கூடாது. இவற்றுடன் விளையாட தினசரி ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். இதற்கு புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளையே சாப்பிட கொடுக்க வேண்டும். இதன் எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து அவசியம். இவற்றில், குறைந்த மென்மையான மற்றும் அதிக முடி கொண்டவை என, இரு வகையான ரோமங்கள் இருப்பதால், உங்களுக்கேற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். உரிமையாளரிடம் அதீத விசுவாசம் காட்டும் இனமாக இது, உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கு சான்றாக பிரிட்டனில் நடந்த ஒரு உண்மை சம்பவம், நாய் பிரியர்கள் மத்தியில் இந்த இன பப்பிக்கான அங்கீகாரத்தை மேலும் அதிகரித்தது. பிரிட்டனில், 2016ல், தேவ் என்ற போலீசாரை, எதிரிகள் கத்தியால் குத்தியுள்ளனர். அச்சமயத்தில் அவருடன் காவலுக்கு இருந்த, 'பின்' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு பப்பி, களத்தில் முன்நின்று, தன் உயிரை பணயம் வைத்து, அவரை காப்பாற்றியுள்ளது. இதற்காக, அதற்கு வைக்கப்பட்ட சிலை, இந்த இன பப்பிகளின் விசுவாசத்திற்கு சாட்சியாக தற்போதும் அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் இது குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளும். பாதுகாப்பு, கண்காணிப்பு, விசுவாசம், கணிவு, உத்தரவை கீழ்படிதல் என, பல சிறப்புகளை கொண்டிருப்பதால், இதற்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். கிட்டத்தட்ட 9-13 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்றாலும், முறையான பராமரிப்பு, சரியான பயிற்சிகளால், இதன் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி