உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜிக்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க கவர்

பதவி இல்லாவிட்டாலும் ‛மாஜிக்கு பவர்: கமிஷனர் ஆபீசிலேயே வாங்குறாங்க கவர்

பணி நிமித்தமாக கலெக்டர் அலுவலகம் வந்திருந்த சித்ரா, ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, இரண்டாவது தளத்துக்கு, 'லிப்ட்'டில் சென்றாள்.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீசுக்கு முன்னால, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துனாங்களே... என்னாச்சு...'' என, ஆரம்பித்தாள்.''அதையேன் கேக்குறே... துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அண்ணாமலையும், அம்மன் அர்ஜூனனும் நேர்ல வந்து ஆதரவு கொடுத்ததுனால, 'அரெஸ்ட்' பண்ணி மண்டபத்துல அடைச்சு வச்சது, கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு...'' என்ற சித்ரா, வேறு மேட்டருக்கு தாவினாள்.''முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, மூனு போலீஸ் ஆபீசர்ஸ் 'சல்யூட்' அடிச்சது... காவல்துறை வட்டாரத்துல சலசலப்பை ஏற்படுத்தியிருக்குதாமே...''''ஆமாப்பா... உண்மைதான்! போலீஸ் வட்டாரத்துல இதுதாம்ப்பா... பேசும்பொருளா இருக்கு. போன வாரம் நம்மூருக்கு சி.எம்., வந்தப்போ, ஏர்போர்ட்டுல தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி, செந்தில்பாலாஜி வந்தாரு. அவரு, இப்போ அமைச்சரா இல்லை. கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் கூட, இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கலை,''''பெயருக்கு பின்னால, எம்.எல்.ஏ.,ன்னு கூட போடுறதில்லை. கரூர் மாவட்ட செயலாளர்னு மட்டும் போடுறாரு. அந்தளவுக்கு 'சைலன்ட்'டா இருக்காரு. ஆனா, நம்மூர் போலீஸ் ஆபீசர்ஸ் மூனு பேரும், அவருக்கு பொதுவெளியில் 'சல்யூட்' அடிச்சு, வணக்கம் சொன்னாங்க. அங்கிருந்த போலீஸ்காரங்களும், கட்சிக்காரங்களும் அதைப்பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. ஐ.பி.எஸ்., அந்தஸ்துல இருக்கற ஆபீசர்களே இப்படி நடந்துக்கிறாங்களேன்னு, விமர்சனம் எழுந்துருக்கு,''

தனி ராஜ்ஜியம்

''போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துல இருக்கற, 'ரைட்டர்' ஒருத்தர் தனி ராஜ்ஜியமே நடத்திட்டு வர்றாராமே...''அதையேன் கேக்குறே. கமிஷனர் காது வரைக்கும் கம்ப்ளைன்ட் போயிடுச்சு. என்ன ஆக்சன் எடுப்பாரோன்னு, போலீஸ்காரங்க 'வெயிட்' பண்ணிட்டு இருக்காங்க,''''அப்படியா... அந்த 'ரைட்டர்' அந்தளவுக்கு என்ன செய்றாரு...''''துணை கமிஷனருக்கு வர்ற புகார்களை முழுசா படிச்சு, ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு 'பஞ்சாயத்து' பேசுறாராம். டீலிங் பேசி, 'கவர்' அள்ளுறாராம். இது, பப்ளிக் சைடுல நடக்குற கலெக்சன். கமிஷனர் ஆபீசுக்குள்ள, அதுவும் துணை கமிஷனர் அலுவலகத்துல வேலை பார்க்குற கெத்துல, 'டிரான்ஸ்பர்' வாங்கித் தர்றதா சொல்லி, போலீஸ்காரங்ககிட்ட, கரன்சியை அள்ளியிருக்காரு. இதெல்லாம், கமிஷனர் கவனத்துக்கு போயிருச்சு. இதுக்கு முன்னாடி இதுமாதிரி கம்ப்ளைன்ட்டுல சிக்குனவங்களை, மண்டலம் விட்டு மண்டலம் துாக்கியடிச்சாரு... ரைட்டருக்கு என்ன தண்டனை கெடைக்குமோன்னு, எதிர்பார்த்துட்டு இருக்காங்க...'' என்று சொன்ன சித்ரா, ஆபீசர் ஒருவரை சந்திக்கச் சென்றாள்.வெளியே இருக்கையில் காத்திருந்த மித்ரா, 'வாட்ஸ் அப்' பதிவுகளுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

வக்கீல்களுக்கு 'டோஸ்'

ஆபீசரை சந்தித்து விட்டு வந்த சித்ரா, ''ஆளுங்கட்சியை சேர்ந்த வக்கீல்களுக்கு, 'செம டோஸ்' விழுந்துச்சாமே...'' என, 'ரூட்' மாறினாள். நம்மூர்ல ஆளுங்கட்சி வக்கீல்களுக்குள்ள பிரச்னை இருக்கு. சி.எம்., பர்த் டே பங்ஷன் நடந்தப்போ, ரெண்டு வக்கீல்களுக்கு இடையே பிரச்னை வந்து, மேலிடம் வரைக்கும் கம்ப்ளைன்ட் போச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆளுங்கட்சியின் சட்டத்துறை செயலர் வந்திருந்தாரு,''''வக்கீல் அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகளை தனித்தனியா கூப்பிட்டு பேசியிருக்காரு. அப்போ, சிலருக்கு 'டோஸ்' விழுந்திருக்கு. ஒத்துமையா செயல்படணும்; இல்லேன்னா பதவி பறிபோயிடும்னு 'வார்னிங்' குடுத்துருக்காரு. சீனியர் வக்கீல்களுக்கும் 'அட்வைஸ்' கொடுத்தாராம். அதுக்கப்புறம்... முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை, கோஷ்டி இல்லாம கொண்டாடியிருக்காங்க,''

ஒன்றியங்கள் பிரிப்பு

''ஆளுங்கட்சியில இரண்டு ஒன்றியமா இருந்ததை, மூன்றா பிரிச்சிருக்காங்களாமே...''''ஆமாக்கா... 2026 அசெம்ப்ளி எலக்சனுக்காக, மைக்ரோ லெவல்ல ஆளுங்கட்சிக்காரங்க தயாராகிட்டு இருக்காங்க. ஒருத்தர்கிட்ட இருக்குற அதிகாரத்தை குறைச்சு, புதுசா ஒருத்தருக்கு கொடுக்குறாங்க. சூலுார் ஒன்றியத்தை மூனா பிரிச்சதுல, 'அரசியல்' விளையாட்டு இருக்குன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''''இதே மாதிரி, மாநகர் மாவட்டத்துல இருக்கற, பகுதி கழகங்களை பிரிக்கிறதுக்கும் தலைமைக்கு பரிந்துரை அனுப்புனாங்க. இதெல்லாம் சிலருக்கு பிடிக்கலை. செல்வாக்கு குறைஞ்சிடுங்கிறதுனால தலைமைக்கு கடுதாசி போட்டிருக்காங்க. நம்மூர்ல இருந்து ஏகப்பட்ட கடுதாசி போனதும், பகுதி கழகங்களை பிரிக்கிற முடிவை, இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்காங்கன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''''மேட்டுப்பாளையத்துல ஆளுங்கட்சிக்குள்ள இருக்குற கோஷ்டி பூசல் பொதுவெளிக்கு வந்துருச்சுன்னு, கேள்விப்பட்டேன். உண்மையா...''''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மேட்டுப்பாளையம் முனிசிபாலிட்டியை கண்டிச்சு, தென்னங்கன்று போராட்டம் நடத்தப் போறதா ஏ.டி.எம்.கே., அறிவிச்சது. ஏ.டி.எம்.கே., நடத்துன பொதுக்கூட்டத்துல, சி.எம்., ஸ்டாலினை, தரக்குறைவா விமர்சித்து பேசியிருந்தாங்க...''''அதனால, ஏ.டி.எம்.கே., போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த, பஸ் ஸ்டாண்ட் ஏரியாவுல ஆளுங்கட்சிக்காரங்க திரண்டாங்க. முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், அவரோட ஆதரவாளர்கள் பலரும் வரலை. முக்கிய நிர்வாகிகள் யாருமே வராததால, ஆளுங்கட்சியில இருக்கற கோஷ்டி பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துருக்கு. இதை கேள்விப்பட்டு ஆளுங்கட்சி பொறுப்பு நிர்வாகிகள் 'அப்செட்' ஆகிட்டாங்களாம்,''

லஞ்ச டிரைவர் 'டிரான்ஸ்பர்'

கலெக்டரேட் தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த, கவர்மென்ட் கார் டிரைவர்களை பார்த்த சித்ரா, ''வடக்கு தாலுகா ஆபீசுல, லஞ்ச பணத்தை சுருட்டுனது சம்மந்தமா போன வாரம் பேசுனோமே... அதுல, சம்பந்தப்பட்ட டிரைவரை கலெக்டர் ஆபீசுக்கு மாத்திட்டாங்களாம்...'' என்றாள்.''லஞ்சம் வாங்குறதே தப்பு. இதுல, லஞ்ச பணத்தை ஒருத்தரு அமுக்கிட்டாருன்னு 'டிரான்ஸ்பர்' பண்ணியிருக்காங்க. துறை ரீதியா ஆக்சன் எடுத்திருக்கணும். நம்மூர்ல விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் இருக்காங்களான்னு தெரியலை...'' என, மனம் நொந்து பேசினாள் மித்ரா.

ஊராட்சிக்கு ஒருத்தர்

பார்க்கிங் ஏரியாவில் ஆளுங்கட்சி கொடி கட்டிய, கார் நின்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''ஆளுங்கட்சியில இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும், கட்சி நிர்வாகிகள்ல இருந்து ஒருத்தரை நியமிச்சிருக்காங்களாமே. அவரு தான் இனிமே எல்லாமேன்னு வாய்மொழியா சொல்லியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்...'' என்றாள்.''அதுவா... ஆளுங்கட்சிக்காரங்க இப்போ எல்லை மீறி செயல்பட்டுட்டு இருக்காங்க. மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு திருப்திகரமா இல்லைன்னு, உளவுத்துறையில இருந்து கவர்மென்ட்டுக்கு ரிப்போர்ட் போயிருக்கு,''''ஏன்னா... ஊராட்சிகளுக்கு நியமிச்சிருக்கிற கட்சிக்காரங்க... ஜனங்க ஓட்டுப்போட்டு ஜெயிச்ச ஊராட்சி தலைவர்கள் போல செயல்படுறாங்க. ஊராட்சி ஆபீஸ்களுக்கு வர்றாங்க.செயலர்கள்கிட்டயும், பணியாளர்கள்கிட்டயும் அதிகாரம் செலுத்துறாங்க. போதாக்குறைக்கு ஆபீசுலயே உட்கார்ந்து வேலையை கண்காணிக்கிறாங்க. டிஸ்ட்டிரிக்ட் ஆபீசர்கள்கிட்ட பேசி, என்னென்ன வேலை செய்யணும்னு ஆர்டர் போடுறாங்க,''''இப்போ... குடிநீர் கசிவை சரி செய்றது, தெருவிளக்கு பராமரிக்கிறது, குப்பை அள்ளுறது, வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்றது, கட்டட அனுமதி தர்ற விஷயங்கள்ல மூக்கை நுழைச்சு, காசு பார்த்துட்டு வர்றாங்களாம்.இதெல்லாம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியுமா, கலெக்டர் பர்மிஷன் கொடுத்து தான், இந்தளவுக்கு ஆளுங்கட்சிக்காரங்க எல்லை மீறி செயல்படுறாங்களான்னு விமர்சனம் எழுந்திருக்கு...'' என்றபடி, கலெக்டர் அலுவலககேன்டீனை நோக்கி நடந்தாள் மித்ரா.மொபைல் போனில் பேசிக் கொண்டே, அவளை பின்தொடர்ந்தாள் சித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூன் 17, 2025 23:13

மாஜி செந்தில் பாலாஜிக்கு மூணு ஐ.பி.எஸ்., ஆபீசர்கள் சல்யூட் அடித்து வணக்கம் சொன்னாங்களா..? அவங்க படித்து வாங்கின IPS ஆக இருக்காது. Service promotion னில் வந்தவங்களாயிருக்கும்.