ஈகோ பிரச்னையை தவிர்த்தது தி.மு.க.,; வாங்கோ என அழைக்குது அ.தி.மு.க.,
''அ ர்ஜூனர் வில்லு... அரிச்சந்திரன் சொல்லு... இவனோட தில்லு பொய்க்காது'' விஜய் படப் பாடலைப் பாடிக் கொண்டே வந்தாள் மித்ரா. ''என்ன மித்து... பாட்டெல்லாம் அமர்க்களமா இருக்கு...'' ''சித்ராக்கா... நம்மூர்ல இருக்கிற விஜய் கட்சிக்காரங்க, மதுரைல விஜய்க்கு கூடின கூட்டத்தை நெனைச்சு சந்தோஷமா இருக்காங்களாம். ''நம்மூர்ல ஓட்டை அள்ளிடலாம்ன்னு நம்புறாங்களாம். இப்பவே 'சீட்'டுக்கு நிர்வாகிகள்ட்ட போட்டி ஆரம்பிச்சுடுச்சாம்'' ''மித்து... அதெல்லாம் எலக்ஷன் வர்றப்ப பார்ப்போம். திருப்பூருக்கு எடப்பாடி வர்றாருல்ல'' ''ஆமாக்கா... கூட்டத்துல 'மாஸ்' காமிக்கணும்ன்னு இப்ப இருந்தே அ.தி.மு.க., காரங்க 'பிளான்' பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம். லட்சம் பேரைத் திரட்டணுமாம். இதுக்காக, வீடு வீடா போய் கொங்கு ஸ்டைல்ல வெத்திலை பாக்கு கொடுத்து கூட்டத்துக்கு 'வாங்கோ'ன்னு அழைக்கப்போறாங்களாம். கூட்டத்தைப் பார்த்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சிக்காரங்க மிரளணும்ன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்'' ''மித்து... கூட்டத்தை எந்த வழியிலயும் சேர்க்கலாம். ஆனா, அது ஓட்டா மாறுனாத்தானே சக்சஸ்... இது புரியாதா அ.தி.மு.க., காரங் களுக்கு...'' ''அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டத்துல ஜெயராமன் பேசுனதக் கவனிச்சீங்களா... மினிஸ்டரா வேலுமணி இருக்கிறப்ப, 'பொள்ளாச்சிக்கு ஸ்மார்ட் சிட்டி ஸ்கீம் வரணும்'ன்னு கேட்டேன். ஆனா, அதுக்குப் பதிலா திருப்பூருக்கு வந்துடுச்சுன்னு வேலுமணிகிட்ட உரிமையா கோபிச்சாராம்க்கா'' ''ஆனா மித்து... ஸ்மார்ட் சிட்டியோட நிலை இப்ப எப்படியிருக்குதுன்னு ஜெயராமனுக்குத் தெரியும்தானே...'' சித்ரா சிரித்தாள். பா.ஜ., போராட்டம் மாநகராட்சி 'ரீயாக்ஷன்' ''ஆமாக்கா ஆமா... குப்பை பிரச்னைல சிட்டி ரொம்பவே திணறுது... ஒரு வாரத்துல தீர்வு காணலாம். மூனுல இருந்து ஆறு மாசத்துல நிரந்தரத்தீர்வு காணலாம்ன்னு மேயர் சொல்லியிருக்கார்க்கா...'' ''மித்து... இதைத்தான் மொதல்ல இருந்து சொல்லிட்டிருக்காரு... பிரச்னை முத்தின பிறகு புலம்பறதுல அர்த்தம் இல்ல... ஆனா, பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறதுல எல்லா கட்சிக்காரங்களும் ஆக்க பூர்வமாக செயல்படணும். ''உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறது வேலைக்கு ஆகாது... பாதிக்கப்படுறது நம்ம ஊரோட சுற்றுச்சூழல்தான்...'' ''ஆமாங்க்கா... குப்பை பிரச்னைக்காக, பா.ஜ., காரங்க அறுபது வார்டுலயும் போராட்டம் நடத்துனாங்க; விதவிதமா போராடுனத, பார்த்தீங்கள்ல...'' ''ஆமா... சும்மா வாய்ச்சவாடலா பேசிட்டிருந்தா போதுமா... களமிறங்கிப் போராடுறது சரிதான்... பா.ஜ., போராட்டத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, கார்ப்பரேஷன் காரங்க, குப்பையை அள்ள தீவிரமா களமிறங்குனாங்க பார்த்தேல்ல'' ''அக்கா... முதலிபாளையத்துல இருந்த ஒரு பாறைக்குழியில முன்பு குப்பை கொட்டிட்டிருந்தாங்களாம். பணப்பிரச்னையால குப்பை கொட்ட உரிமையாளர் அனுமதிக்கலையாம். ''பாறைக்குழி உரிமையாளரை தெற்கு வி.ஐ.பி., அழைச்சு, கார்ப்பரேஷன் கமிஷனரை வச்சுப்பேசி குப்பை கொட்ட அனுமதி வாங்குனாராம்... ''இதுல மாநகர வி.ஐ.பி.,யைப் பார்க்க பாறைக்குழி உரிமையாளர் சம்மதிக்கவே இல்லையாம். இருந்தாலும், பிரச்னைக்குத் தீர்வு காணணும்ங்கிற அடிப்படையில மாநகர வி.ஐ.பி., இதை ஏத்துக்கிட்டாராம். ''ஒருவழியா தெற்கு வி.ஐ.பி.,யும், மாநகர வி.ஐ.பி.,யும் இந்த விஷயத்துல 'ஈகோ' பார்க்காம இருந்திருக்காங்க... இது நல்லதுதான். ''மித்து... தி.மு.க.,ல மாநகர 'ராஜா'வா யார் வேணாலும் இருந்துட்டுப்போகட்டும்; 'ஈகோ' இல்லாம நிர்வாகிங்க இருந்தா, சிறப்பு'' சரியாகச்சொன்னாள் சித்ரா. ''சித்ராக்கா... நம்ம மாவட்டத்துல நடக்கிற பணிகள் குறித்து சீப் செக்ரட்டரி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு நடத்தியிருக்காரு... ''இதுல ஊரக வளர்ச்சித்துறை பணிகள் மந்தமா இருக்கிறது தெரிஞ்சு லெப்ட் அண்ட் ரைட் வாங்கீட்டாராம். ''ஏன் பணி நடக்கலைன்னு பார்த்தா, உதவி இயக்குனர், அலுவலக கண்காணிப் பாளர் பணியிடம் காலியா இருந்திருக்கு. அந்தப் பணிக்கு விருப்பமில்லாம, நியமிக்கப்பட்ட பி.டி.ஓ., லீவ்ல போயிட்டாரு. இதனால, பல்லடத்துல சூப்பரா வேலை பார்த்திட்டிருந்த பி.டி.ஓ.,வை, அந்த போஸ்ட்டுக்கு நியமிச்சு கலெக்டர் உத்தரவு போட்டுட்டார். கலெக்டர் ஆபீஸ் வேணாம்ன்னு சொன்னவருக்கு, ஒன்றியத்துல போஸ்டிங் போட்டுக் கொடுத்துட்டாங்க. ''அதேமாதிரி குப்பை பிரச்னை, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துறதுல குழப்பம்ங்கற காரணத்தை முன்வச்சு, இன்னொரு பி.டி.ஓ.,வையும் டிரான்ஸ்பர் பண்ணியாச்சு'' வெளிப்படுத்தினாள் மித்ரா. மாலையுடன் வந்தார்கள் சோகத்தில் சென்றார்கள் ''மித்து... மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குற விழாவுல, 38 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கணும். ஆனா வந்ததோ, 30 பேருக்குத்தான். ''ஸ்கூட்டருக்குப் போடுறதுக்காக மாலை எல்லாம் வாங்கிட்டு வந்தவங்க கண்ணீர் விட்ருக்காங்க... மாலையைச் சாமிக்குப் போட்டுட்டு, சீக்கிரம் ஸ்கூட்டர் கிடைக்கணும்ன்னு வேண்டிக்கோங்கன்னு ஊழியர்கள் சொன்னாங்களாம்... அவங்கள பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு'' ''சித்ராக்கா... மங்களகரமான புத்துார்ல ரேஷன் கடை ஊழியர், உடல்நலக்குறைவால் மாசக்கணக்குல லீவுல இருக்காரு... மூனு நாள் மட்டும் பொருள் சப்ளை ஆயிருக்கு.... தினமும், சொசைட்டி ஆளுங்க வந்து, 'இன்று விடுமுறை'ன்னு எழுதிட்டு போறதே வழக்கமா இருந்துச்சு. காத்திருந்த மக்கள், ஒருநாள் போராட்டம் நடத்தினாங்க. கலெக்டர் ஆபீசுக்கு, இது தெரிஞ்ச பிறகுதான், மாற்று ஊழியர்களை வரவழைச்சு ரேஷன் பொருட்களை சப்ளை பண்ணியிருக்காங்க...'' ''மித்து... எலக்ஷன் நெருங்குறதால, இலவச பட்டா கொடுக்கிறதுல கவர்மென்ட் ஆர்வம் காட்டுது... எங்கேயாவது இடம் கிடைக்காதான்னு தேடிக்கிட்டு இருக்காங்க... ''நல்லுார் ஈஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமா பல ஏக்கர் நிலம் இருக்கு... அது புதர் மண்டிக்கிடந்துச்சு... ''இது கட்சிக்காரங்க கண்ணுல பட்டு, இதையும் பட்டா போட்டு கொடுத்துருவாங்களோன்னு பயந்து, உஷாரான அதிகாரிகள், இடத்தைச் சுத்தம் செய்து, பாதுகாப்பு வேலியும் அமைக்கத் துவங்கீட்டாங்களாம்'' மித்ரா புன்னகைத்தாள். கண்ணில் 'ரத்தம்' வரவைத்த அதிகாரி ''சித்ராக்கா... போலீஸ் மேட்டருக்கு வருவோம். சிட்டில ஆயுதப்படை போலீஸ் பற்றாக்குறையா இருக்காங்களாம். ''போராட்டம், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு ஆள் பத்தல. ஆபீசருங்களுக்கு வாகனம் ஓட்டவும் ஆள் இல்லையாம். இதுல உயரதிகாரி கவனம் செலுத்தணும்'' ''மித்து... வடக்கே ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க கதி கலங்கறாங்களாம். ''அங்க இருக்கிற குற்றப்பிரிவுக்கு, கன்ட்ரோல் ரூம்ல போலீசை அலறவிட்ட, இன்ஸ்பெக்டரை போட்ருக்காங்க... ''கல்நெஞ்சராம் அவரு. போலீஸ்காரங்க குடும்ப சூழலைப் புரிஞ்சுக்காம வெளுத்து வாங்குறாராம். ''அங்க இருக்கிற சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஒரு நாளு லீவு போட்டாராம். அந்த நாள்ல எல்லா போலீசையும் இவரு கலங் கடிச்சுட்டாராம். ''அத்தனை பேரு கண்ணுலயும் ரத்தமே வர வச்சுட்டாராம். இதைக் கேள்விப்பட்ட சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரு, லீவு எடுக்கணும்னாலே யோசிக்கிறாராம். ''ஏதாவது குண்டக்க மண்டக்கன்னு ஆயிருச்சுன்னா நாந்தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்ன்னு நெனைச்சுப் பயப்படறாராம்'' ''சித்ராக்கா... மாணவர் சங்க மாநாடு சமீபத்தில திருப்பூர்ல நடந்துச்சு. இதுக்காக வளர்மதி மேம்பாலத்துல கட்டுன கொடியை போலீஸ் அகற்றுனாங்க... ''உடனே கட்சிக்காரங்க மறியல்ல ஈடுபட்டாங்க... மக்களுக்காக பாடுபடுறதா சொல்ற இயக்கம், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துற விதமா நடந்துக்கலாமான்னு காதுபடவே மக்கள் கமென்ட் பண்ணீட்டுப் போறத கேக்க முடிஞ்சுது'' வசூல் வேட்டை திடீர் நிறுத்தம் ''மித்து... பணிக்கம்பட்டி அம்மன் நகர்ல, நல்ல தண்ணிக்குப் போடப்பட்ட குழாய்ல உப்புத்தண்ணிதான் வந்துச்சு. ஒவ்வொரு வீட்லயும் நல்ல தண்ணிக்கு மாசாமாசம் பணம் வசூலிச்சிருக்காங்க... இதுக்கு பைனான்ஸ்காரங்க மாதிரி அட்டை போட்டும் கொடுத்திருக்காங்க. இந்த விஷயம் 'லீக்' ஆனவுடனே, வசூலை நிறுத்தீட்டாங்க... இது சம்பந்தமா என்கொயரி நடக்கப்போகுதாம்'' ''அக்கா... அந்த 'ஈஸ்வரனே' வந்தாலும் இந்த மாதிரி வசூல் விஷயங்களைத் திருத்த முடியாது'' ''மித்து... 27ம் தேதில இருந்து அமெரிக்காவுல இந்தியா இறக்குமதி செய்ற பொருட்களுக்கு 50 சதவீத வரி அமலுக்கு வருதாம்ல...'' ''கடைசி நேரத்துல இதை ஸ்டாப் பண்ணீடுவாங்கன்னு எக்ஸ்போர்ட்டர்ஸ் நினைக்கிறாங்களாம். இது நிச்சயம் நடக்கணும்'' ''சித்ராக்கா... விநாயகர் சதுர்த்தி தினத்துல எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும்'' 'விநாயகனே... வினை தீர்ப்பவனே...' என்ற பாடல், அருகில் உள்ள கோவிலில் இருந்து ஒலிக்க ஆரம்பித்தது.