பார்த்பென்ஸ் டிப்பரில் மெர்சிடிஸ் பென்ஸ் கியர்பாக்ஸ்
பார்த்பென்ஸ் டிப்பரில் சிறப்பம்சம் என்ன?எங்கள் சுரங்க டிப்பர்களில், ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட, ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வரும் ஏ.எம்.டி., கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை, டிப்பர் லாரிகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து பயன்படுத்தி உள்ளோம். டிரைவர்களுக்கு கிளட்ச் அமுக்கும், கியர் மாற்றும் வேலைகள் உள்ளிட்டவை குறைவது மட்டுமின்றி, மேனுவல் கியர்பாக்ஸை விட அதிக மைலேஜ் தருகிறது. வாடிக்கையாளர்களில், 60 சதவீதம் பேர் ஆட்டோ கியர்பாக்ஸை விரும்புகின்றனர்.கார்களில் வரும், இந்த ஆட்டோ கியர்பாக்ஸ், டிப்பர்களுக்கு வடிவமைப்பதில் சவால்கள் என்ன-?இந்தியாவில் ஆந்திராவில் துவங்கி அசாம் வரை பல மாநிலங்களில், சுரங்கங்கள் உள்ளன. சுரங்கத்திற்கு சுரங்கம் வேறுபடும், சாலைகள் மாறுபடும். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சுரங்கத்திற்கு எங்கள் பொறியாளர்கள் சென்று, சாலைகள் உள்ளிட்ட இதர தரவுகளை சேகரித்து, அவற்றை ஆராய்ந்து, இந்த ஆட்டோ கியர்பாக்ஸ் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதை செய்து முடிக்க, 8 முதல் 10 மாதங்கள் வரை ஆனது.மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய, என்ன முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன?டைம்லர் குழுமத்தை பொறுத்த வரை, மின்சார மற்றும் ஹைட்ரஜன் எரிவாயுவை முக்கிய மாற்று எரிபொருட்களாக கருதுகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, ஜி-20 மாநாட்டில், ஹைட்ரஜன் பஸ் காட்சிப்படுத்தப்பட்டது. மின்சார, ஹைட்ரஜன் மற்றும் எல்.என்.ஜி., ஆகிய மூன்று தொழில்நுட்பங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.