தடங்கலின்றி சொத்து வாங்க உதவும் கருத்துரு: பொறியாளர் ஆலோசனை பெறுவது அவசியம்
அ சையா சொத்துக்களான நிலம், வீடு வாங்கும் முன் அவற்றை பற்றிய தொழில்நுட்ப ஆலோசனைகளை, ஒரு பதிவுபெற்ற பொறியாளரிடம் பெறுவது மிகுந்த பயனை அளிக்கும். விற்பவருக்கு அந்த சொத்தை விற்க, சட்டபூர்வ அதிகாரம் உள்ளதா என்பதை வழக்கறிஞர் கருத்து வாயிலாக அறியலாம். சொத்தின் தன்மை பற்றி தொழில்நுட்ப ரீதியாக அறிந்து கொள்வது, பிற்காலத்தில் அந்த சொத்தை தடங்கலின்றி, எதிர்பார்த்த தேவைக்கு பயன்படுத்த பொறியாளரின் கருத்துரு உதவும். உதாரணமாக, ஒரு மனை வாங்குவதாக இருந்தால் அதற்கு அரசு 'அப்ரூவல்' உள்ளதா, பயன்பாடு என்ன, எவ்வகை கட்டுமானம் செய்யலாம். திட்ட சாலை ஏதாவது வருகிறதா போன்ற ஆலோசனைகளை முன்கூட்டியே தெரிந்து, அதற்கேற்ப பத்திரம் பதிவு செய்யலாம். பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது: பொறியாளரின் வரைபடம் பத்திரத்தினுடன் இணைத்து பதிவு செய்யும்பொழுது மனை எதுவென்று எளிதாக அளவுகளுடன் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒரு கட்டடம் வாங்கும்முன், அதற்கான முழுமையான அரசு அனுமதி உள்ளதா? எந்த அளவுக்கு இல்லை, மேற்படி அனுமதி பெறமுடியுமா அல்லது சரி செய்ய முடியுமா, அனுமதி உத்தரவின் உண்மை தன்மை, பத்திரத்தில் குறிப்பிடப்படும் கட்டட பரப்பின் அளவு சரியா, சொத்து வரி போன்ற விஷயங்களை சரி பார்த்து, பொறியாளரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். முக்கியமாக, பொது ஒதுக்கீட்டு இடம் என்றால் அது எதற்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக பூங்கா இடத்தில் கிளப், கோவில் போன்ற வேறு விதமான கட்டுமானத்திற்கு அனுமதி இல்லை. இதையெல்லாம் ஒரு பொறியாளரால் கண்டறிய முடியும். அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்குவதென்றால், அனுமதி பெற்ற வரைபடம் உள்ளதா, 'ரெரா' பதிவு உள்ளதா, அவைகளின் உண்மை தன்மையை சரி பார்த்தல், பிளாட்டின் பரப்பளவு, பொது உபயோக பரப்பின் அளவு, யு.டி.எஸ்., நிலத்தின் பங்கீடு, பொது வசதிகள், உரிமையாளர் சங்க உரிமை போன்ற விஷயங்களை உறுதி செய்ய பொறியாளர் கருத்துரு உதவியாக இருக்கும். இணையவழி வருவாய் ஆவணங்களான பட்டா, டி.எஸ்.எல்.ஆர்., வரைபடம் மற்றும் வில்லங்க சான்று, நில மதிப்பு பற்றி ஆலோசனை பெறலாம். ஒரு சொத்தை பற்றிய தொழில் நுட்ப ஆலோசனையுடன், பத்திரம் பதிவு செய்யும் பட்சத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படலாம். பதிவு பெற்ற பொறியாளர்களின் விவரங்களை உள்ளாட்சி இணையதளத்தில் பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.